Pages

Monday, March 29, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 9 – சவேரியர்)


நிலம் குழைய, குளம் வழிய நல்ல மழை யாழில் பெய்து ஓய்ந்தது. மேற்றிசை வான்சரிவில் ஏழ்வண்ண வில்லோவியம் எழுந்து நின்றது. வானத்தில் நிற முகில்கள் பல்வேறு சித்திரங்களாக வடிவெடுத்து நின்றன.
தன்னை நோக்கி வந்த வீரமாப்பாணனை எதிர்கொண்டு வரவேற்ற சங்கிலி

“நல்ல சமயத்தில் தான் வந்தாய் தோழா! உன்னிடம் ஓர் ஆலோசனை கேட்க வேண்டும்.”
“என்ன விடயமாக?”
“வடிவழகிக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு பற்றி தேவிக்கு சிறிது சந்தேகம் வந்திருக்கின்றது. இதற்கு என்ன செய்யலாம்”
“அதைத் தக்க தருணம் வரும் போது கூறிச் சமாளித்துக் கொள்ளலாம். இப்பொழுது வேறொரு பணி வந்துவிட்டது”
“என்ன அது?”
“சவேரியர் உன்னைக்காண வந்திருக்கின்றார்”
“யாரவர் சவேரியர்?”
விளக்கினான் நண்பன்.
**********************************************************************************
மன்னாரில் அறுநூறு பேருக்கு சிரச்சேதம் செய்ததால் அங்கு மதத்தைப் பரப்பிக் கொண்டிருந்த கிறிஸ்தவ குருவானவர் தப்பிக் கோவைக்குச் சென்றதை முன்னைய அத்தியாயம் ஒன்றில் வாசித்திருப்பீர்கள். அவர் நேரடியாக அங்குள்ள பிரதம குருவான சவேரியரிடம் சென்றார்.

“என்ன சிஷ்யா! திடீரென மன்னாரிலிருந்து இங்கு வந்து நிற்கிறாய். அங்கு எல்லோரையும் எங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டாயா?” சவேரியர் வினவினார்.
“குருவே! எங்கள் திட்டத்தில் எல்லாம் இடிவிழுந்து விட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து புயல்போல ஒரு அரசன் கிளம்பி வந்து மதம் மாறுவோரைத் தண்டித்தான். எதிர்த்த அறுநூறு பேருக்கு எந்தவிதக் கருணையும் காட்டாமல் சிரசைக் கொய்ய ஆணையிட்டான். அவன் தீவிர மதப்பற்றுடையவனாகத் தெரிகின்றான். அவன் இடத்தில் எங்கள் விளையாட்டுக்கள் எதுவும் பலிக்காது போலிருக்கின்றது.” எனப் பரிதாபமாகக் கூறினார்.

“ஓ! அப்படியா? சங்கதி, அதை நானும் ஒருமுறை பார்க்கின்றேன்.” என ஆவேசமாகக் கூறிக்கொண்டு மன்னார் வருவதற்கு ஆயத்தமானார். அதன்படி மன்னாரிலும் வந்திறங்கினார். அங்கு மதத்தைப்பரப்புவதற்காக மக்களைச் சந்தித்தார். அதற்காக சில சலுகைகளையும் வெளியிட்டார்.

“மகா சனங்களே! நீங்கள் எல்லோரும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கும் வருட வருமானத்தின் ஐந்து மடங்கை நாம் இனாமாகத் தருகின்றோம். உங்களை உயர் ராஜாங்க உத்தியோகங்களில் அமர்த்துகின்றோம். அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்விக்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசதிகளைப் பெற்றுத் தருகின்றோம்” என இவ்வாறான பல சலுகைகளை அறிவித்திருந்தார். மக்கள் எவருமே அதற்குச் செவிசாய்க்கவில்லை. சங்கிலியின் குணம் தெரிந்திருந்ததால் அவன் ஆணையைக் கடக்க எவரும் விரும்பவில்லை. இதனால் மன்னாரில் நின்று பயனில்லை என அறிந்த சவேரியர் 1548 இல் சங்கிலியை சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் வந்தார்.
************************************************************************************

அந்தவகையில் சவேரியரை ஒரு வெளிநாட்டுத் தூதர், அத்துடன் ஒரு மதகுரு என்ற வகையில் சிறந்த அரச மரியாதையுடன் வரவேற்று கோட்டை அரச சபா மண்டபத்தில் சங்கிலி சந்தித்தான்.

“வணங்குகின்றேன் அரசே! உன் புகழ் கடல் தாண்டி இந்தியாவிலும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வளவு வீரம் படைக்கப்பெற்ற நீ பறங்கி அரசர்களோடு நல்லுறவை வைத்துக் கொண்டால், உனக்கும் உன் நாட்டு மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்குமே!” என ஆசை வார்த்தை கூறினார் சவேரியர்.

ஆனால் இதற்கெல்லாம் மயங்குகின்றவனா நம்மன்னன் சங்கிலி. சவேரியரது உள் நோக்கங்களைப்புரிந்து கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் “ஆம் அவ்வாறே செய்யலாமே!” எனக் கூறினான்.
அதன்படி ஒரு ஒற்றனை அனுப்பி கோவையில் இருக்கும் அரசனுடன் கதைத்து அவன் விரப்பத்தைக் கேட்டு வரும்படி கூறினார் குருவானவர்.
அதற்கேற்ப சங்கிலியும் தன் அந்தரங்க தூதுவனொருவனை கோவைக்கு அனுப்பி வைத்தான். அதன்படி அவன் வரும்வரை சவேரியரை பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திலேயே தங்க வைத்துக் கொண்டான். போன தூதனும் சில நாட்களில் கோவை பறங்கி அரசனது தகவலுடன் யாழ் வந்து சேர்ந்தான்.
அரச சபையிலே அரசனைச் சந்தித்து கோவை அரசன் நம நட்பை ஏற்றதாகவும் அதற்கு அடையாளமாக சில நினைவுச்சின்னங்களையும் அரசனுக்கு ஒரு நட்பு ஓலையையும் தந்ததாகக் கூறினான். இவ்வாறு சில நாட்கள் அமைதியாக ஓடின. ஒருநாள் சங்கிலியைச் சந்தித்த சவேரியர் மெல்ல தன் எண்ணத்தைத் தெரிவித்தார்.

“அரசே! என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சேர்த்து நாங்கள் நிறைய ஆட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளோம்.”
“அது தெரியும் தானே”
“இல்லை எங்களுக்கு…”
“என்ன ஏதாவது குறைபாடா? அரச ஊழியர்கள் உங்களைச் சரிவரக் கவனிப்பதில்லையா? அவர்களைத் தண்டிக்கட்டுமா?”
“இல்லை அரசே! நாங்கள் வழிபடுவதற்கு இங்கு எங்களுக்கு தெய்வம் இல்லையே”
“இதில் என்ன வருத்தம் கடவுள் ஒருவர் தானே! நீங்கள் மானசீகமாக மனதால் வழிபட்டாலே போதுமே!” எனக் கூறினான்.
“அப்படியல்ல, எமக்கு இங்கு வழிபட ஒரு கோயில் அமைக்க இடம் தாருங்கள். அதற்கான செலவை நாம் தந்துவிடுகின்றோம்”. என சவேரியர் கூறினார்.
சவேரியரது உள் நோக்கங்களைப் புரிந்து கொண்ட சங்கிலி இப்பொழுது இவர்கள் கோயில் அமைக்க இடம் கேட்பார்கள். காலப்போக்கில் எங்கள் கோயில்களையும் அழித்துவிடுவார்கள் என தனக்குள் நினைத்துக் கொண்டான்.

“நான் ஆரம்பத்திலேயே நினைத்தேன். என்ன இன்னும் நமக்கு இவர்கள் தொல்லை தரவில்லையே என்று? இப்பொழுது புரிகின்றது உங்கள் உள் நோக்கங்கள். இனி உங்களை இங்கே வைத்திருப்பது வயிற்றில் நெருப்பை கட்டி வைத்திப்பது போன்றது. இனி நீங்கள் உங்கள் ஊருக்குச் செல்லலாம். வந்தோரை வரவேற்பது தமிழர் பண்பு. நாம் வரவேற்றோம். ஆனால் உங்கள் கபட நாடகத்திற்கு இங்கு இடமில்லை. நீங்கள் புறப்படலாம்” என கடுமையாக உத்தரவிட்டான்.

இனித்தன் தந்திரங்கள் பலிக்காது என அறிந்த சவேரியர் அவ்வளவில் மனம் சலித்து யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு சீன தேசம் சென்றார்.
ஒரு அழிவில் இருந்து மீண்ட யாழ்மக்களை சிறிது காலத்தில் மாபெரும் அழிவுக்கான ஆயத்தங்கள் சூழ்ந்தன. இதிலிருந்து யாழ்ப்பாண மக்களைக் காப்பாற்ற சங்கிலி பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.


சாதிக்க வருவான்…

0 comments:

Post a Comment