Pages

Monday, March 29, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 11 - வன்னியர் வருகை)


சித்திரையில் சிறுமாரி எனக்கூறுவார்கள். காலையில் மழை வராது என நினைத்துக் கொண்டு தொழிலுக்கும், அன்றாட அலுவல்களுக்குமாக புறப்படுவோர் பிற்பகலில் பெய்யும் மழையால் வீடு திரும்பமுடியாது திணறிவிடுவார்கள். யாழில் அது நிலவி வருகின்றது. இந்தக்காலகட்டத்தில் பாண்டி நாட்டில் வன்னியர்கள் குழுவாக ஆலோசனைகளில் ஈடுபடுகின்றனர்.

‘எமக்கு இங்கு இருப்பதினால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. நாம் யாழ்ப்பாணம் சென்றால் கை நிறையச் சம்பாதிக்கலாம். எம்மையும் வளர்த்துக் கொள்ளலாம்’ என நினைத்த அவர்கள் சில படகுகளில் யாழ்ப்பாணம் நோக்கி வர ஆயத்தமாகினர். அதன்படி இரு மரக்கலங்களைப் பெற்று, ஒன்றினுள் ஐம்பது வன்னியர்களும் இன்னொன்றில் அவர்கள் மனைவிமாரும் பிள்ளைகளும், நம்பிகளும் (ஆண்டிகளில் ஒரு சாதி) புறப்பட்டனர். இவர்கள் ஆயத்தமானபோதே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புறப்பட்ட பயணத்தை தள்ளிப்போடுதல் அவ்வளவு அனுகூலமாக இருக்காது என்ற காரணத்தினால் பயணத்தைத் தொடர்ந்தனர். திடீரென கடல் கொந்தளிக்கத் தொடங்கியது. பேரலைகள் எழுந்து வீழ்ந்தன. சூறைக்காற்று சுற்றிச்சுற்றி சுழன்று அடித்தது. வன்னியர்களது மரக்கலங்கள் சிறியவை, ஆதலால் சூழலுக்கு எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.

இரு மரக்கலங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டது. தமது கணவன்மார்களை பிரிந்திருந்த பெண்களும், தந்தையர்களை பிரிந்த குழந்தைகளும் “குய்யோ! முறையோ!” எனக் கத்திய சத்தம் கடலலைகளை ஊடறுத்து இந்து சமுத்திரம் எங்கும் எதிரொலித்தது. தமது மனைவி, பிள்ளைகளைப் பிரிந்த வன்னியர்களில் சில துணிச்சலானவர்கள் கடலில் குதித்து பேரலைகளை எதிர்கொண்டு நீந்தினார்கள். சில பயந்த வன்னியர்கள் ஒன்றுமே செய்ய இயலாமல் கண்ணீர் வடித்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். ‘கடலில் குதிப்பொமா அல்லது மரக்கலத்திலேயே இருப்போமா?’ என நினைத்த வன்னியரை தடுத்து நிறுத்திய அங்கிருந்த வயதானவர்கள் “உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள், இனி அவன் விட்ட வழி தான்” என கூறினார்கள்.

இதேவேளை மற்றைய மரக்கலத்தில் இருந்தவர்களின் துயரத்திற்கு சொல்லி அளவில்லை. அங்கிருந்த நம்பிகள் குடும்பமாக இருந்ததினால் ‘வாழ்வோ, சாவோ! எதுவானாலும் எல்லோரும் ஒன்றாகவே முகங்கொடுப்போம்’ என்ற முடிவுடன் இருந்தனர். சில பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். “ஐயோ!, உங்களைப் பிரிந்துவாழ எப்படித் தைரியம் வரும், புது இடத்தில் போய் எப்படி வாழமுடியும்.? உங்களுடன் மீண்டும் நாங்கள் சேராவிடின் குடும்பத்துடன் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வோம். இது கடற் கன்னி மீது சத்தியம்” எனக் கதறினார்கள்.

பிள்ளைகள் தாயின் சேலைகளைப் பிடித்துக் கொண்டு, “அம்மா அப்பா எங்கம்மா? அப்பா வருவாரா?” எனக் கண்ணீர் வடித்தார்கள். இவர்கள் எல்லோரையும் தாங்கிய மரக்கலம் நடுக்கடலில் நர்த்தனமாடியது. பல மணிநேர போராட்டத்தின் பின் இந்த மரக்கலமானது யாழ்ப்பாணத்தின் ஒரு கரையை வந்தடைந்தது. கரையில் இறங்கிய நம்பிகளும், பெண்களும், பிள்ளைகளும் செய்வதறியாது தவித்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சனநடமாட்டத்தையும், அவர்களது மற்றைய மரக்கலத்தையும் காணமுடியவில்லை. இதனால் சோகமே உருவாக என்ன செய்வதென்று அறியாது திறந்த வெளியில் இளைப்பாறினார்கள். அங்கு கிடைத்த காய்கனிகளை உண்டு தங்கள் பசியைப் போக்கினார்கள்.

இரண்டு நாட்களின் பின்னர் கடலில் குதித்து நீந்திய வன்னியன் ஒருவன் கரைவந்து சேர்ந்தான். அவனைக்கண்டதும் ஆவல் மேலிட கரையில் இருந்த அனைவரும் எழுந்து அவனை நோக்கி ஓடினார்கள். அந்த அதிஷ்டக்காரன் கரைப்பிட்டி வன்னியனே! அவன் வருகையைக் கண்ட அவன் மனைவி அம்மைநாச்சி பெரிதும் சந்தோஷமடைந்தாள். ஆனாலும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலைமை அவளுக்கு… மற்றயவர்களின் கதி..?
ஆவனைச்சூழ்ந்து கொண்ட கூட்டத்திலிருந்து “என் கணவன் எங்கே? என் கணவனைக் கண்டீர்களா? என் அப்பா எங்கே?” என ஏகோபித்த குரலில் பலர் கேட்டனர். இதனால் ஏற்கனவே இளைத்திருந்த வன்னியன் மிகுந்த களைப்புற்றான்.

கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர் அவனைச்சுற்றி நின்ற கும்பலை அகற்றிவிட்டு அவனுக்கு கிழங்கும் நீரும் கொடுத்தார். அதை அவன் ஆசையுடன் உண்டான். அதன் பின்னர் அவர் “தம்பீ! உன்னுடன் வந்தவர்கள் எங்கேயப்பா? அவர்களுக்கு என்ன நடந்தது?” என துக்கம் மேலிடக் கேட்டார். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவ்வன்னியன், “அந்த இக்கட்டான சூழ்நிலையில் பலர் கடலில் குதித்தனர். அவர்கள் தப்புவது மிகவும் கடினம். எஞ்சியவர்களும் ஒருவாறு தப்ப முயற்சி பண்ணிய போது ஒரு பேரலை எமது மரக்கலத்தை கவிழ்த்து சென்றது. இதனால் நாம் எல்லோரும் கடலில் தூக்கி வீசப்பட்டோம், கடலலைகளுக்குள் சிக்கித் திணறிய நான் ஒரு மரக்கட்டையின் உதவியுடன் ஒருவாறு நீந்திக் கரைசேர்ந்தேன். மற்றவர்கள் வருவதென்பது குதிரைக் கொம்பு தான்” எனக் கூறிமுடித்தான்.

அவனது கூற்றைச் செவிமடுத்த சிலர் மயங்கிச் சரிந்தனர். பலர் என்ன செய்வதென்று அறியாமல் மிரள மிரள விழித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதியில் தங்கிய வன்னியர்கள், அவ்விடம் அவர்கள் தொடர்ந்து வாழ தகுந்த இடமாக காணப்படாததால் குழுக்களாக வெளியேறத் தொடங்கினார்கள். அந்த ஒருமாத காலப்பகுதியில் கடலில் இருந்து எந்தவொரு வன்னியனும் மீண்டுவரவில்லை. இதனால் அவர்கள் இறந்தவர்களே எனத் தீர்மானித்து மிகுதியானவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.

அந்தவகையில் கரைப்பிட்டி வன்னியனும் அவன் மனைவியும் சில நம்பிகளும் கந்தரோடை எனும் இடத்தில் தங்கினார்கள். கரைப்பிட்டி வன்னியன் அரண்மனை சென்று ஏதாவது வேலை வாங்கலாம் என்ற எண்ணத்தில் நல்லூர் பகுதியை நோக்கிப் புறப்பட்டான்.

சாதிக்க வருவான்…

0 comments:

Post a Comment