Pages

Monday, March 29, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 8 – திண்டாட்டம்)


சங்கிலியின் அண்மைக்கால நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பட்டத்து இளம்ராணி இராசமாதேவி சங்கிலியை கண்காணிக்க ஒரு ஒற்றனை ஏற்பாடு செய்திருந்தாள். அந்த மற்றைய சோடி கண்களுக்குரியவன் அவனே. அவன் நேராக இராசமாதேவி இருந்த நந்தவனத்திற்கு வந்தான். அங்கே இராசமாதேவியும் தோழி அங்கயற்கன்னியும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சந்தித்து தான் ண்ட விடயத்தைக் கூறிப்போனான். இதைக்கேட்ட இராசமாதேவியின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது.


“பார்த்தாயா அங்கயற்கன்னி! அரசாங்க அலுவல் என அடிக்கடி கூறிக்கொண்டு சோழியர்புரம் பகுதி சென்று என்ன அலுவலைக் கவனித்திருக்கின்றார் என்று” தனது ஆதங்கத்தை நண்பியுடன் பகிர்ந்து கொண்டாள்.
“தேவி! நாம் தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு வர இயலாது. ஆரசர் நல்லவர், ரொம்பக் கெட்டித்தனமுடையவர்” என்று கூறினாள் தோழி.
“பிற பெண்களை விரும்புவதிலும் அவர் கெட்டிக்காரர் தான்” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் மாதேவி.
“பெண்களை என்று ஏன் பொதுவாகச் சொல்கிறீர்கள், வடிவழகி ஒருத்தியைத் தானே!”
“சாட்சியுடன் இருப்பது இது ஒன்று, சாட்சியில்லாமல் எத்தனை காரியங்கள் நடந்தனவோ? யாரரிவார்?. அரசர் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒன்றனை என்னால் அனுப்ப முடியுமா? அது தர்மமாகுமா?”
“விடுங்கள், அரசர் அப்படிச் செய்யக்கூடிய ஆளில்லை. அவர் மேல் குற்றம் கூறமுடியாது. அவருக்கு இடம் கொடுத்த வடிவழகியைத் தான் குற்றம் கூறவேண்டும், அரசர் கல்யாணமானவர் என்று தெரிந்துமா அவள் காதலிக்கத் துணிந்தாள்.” என்று சமாதானம் கூற முயன்றாள் தோழி.
“அவள் கூடாதவள் என்று நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே”
“அப்படியெல்லாம் கூறமுடியாது. எல்லோரும் நல்லவர் போல் தான் நடிப்பார்கள். தக்க சமயம் வரும்போது தான் அவர்களது சுயரூபம் வெளிப்படும். ஆசைக்கும் அளவு இருக்க வேண்டும். கட்டிய மனைவி இருப்பது தெரிந்தும் ஓர் ஆடவனை வேறொரு பெண் காதலிக்கலாமா? இது தமிழர் பண்பாடாகுமா?” என பிரசங்கம் செய்தாள் அங்கயற்கன்னி.
“சரி இதைப்பற்றி பேசிப்பயன் என்ன? எல்லாம் ஆண்டவன் விட்ட வழிப்படி நடக்கட்டும். இருட்டுகின்றது நீ போய் வா! நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நாளை உன்னை மீண்டும் சந்திக்கின்றேன்.” எனக் கூறிக்கொண்டு இராசமாதேவி நேராக மன்னன் பள்ளியறை நோக்கிச் சென்று பஞ்சணையில் தொப்பென்று விழுந்து தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

அன்றைய அலுவல்களை முடித்துக்கொண்டு சங்கிலி தன் படுக்கையறை நோக்கி வந்தான். அரசன் வருவதை அறிந்த தேவி விருட்டென எழுந்து பஞ்சனையின் ஒரு மூலையில் உட்கார்ந்து தலையை மறுபுறம் திருப்பி வைத்துக் கொண்டாள். அறைக்குள் நுழைந்த சங்கிலி இடுப்பிலிருந்த உடைவாளைக் கழற்றி ஒரு மூலையில் வைத்துவிட்டு மேலங்கியையும் கழற்றி வைத்துவிட்டு பஞ்சணையில் திரும்பியிருந்த தேவியைப் பார்த்தான்.

இதுவரை வெளியில் எடுக்கப்படாதிருந்த வெண்பட்டு, மலரிலும் மென்மையான அவள் உடலை ஆசையுடன் தழுவி நின்றது. மார்பில் தொங்கிய கெம்புக்கல்லும் அவள் தலையில் செருகியிருந்த ரோஜாப்பூவும் அந்த வெண்பட்டுக்கு மாற்று வர்ணங்களாக அமைந்தன. சிலகணம் அவள் அழகைப்பருகிய சங்கிலி மெதுவாக அவள் பின்புறமாக வந்து அவளுக்குப் பின்னால் அமர்ந்து தனது வலது கையால் அவள் இடையைச் சுற்றிப்பிடித்தான்.
வெடுக்கென அவன் பிடியிலிருந்து விலகி மாதேவி எழுந்து நின்றாள். இதைச்சற்றும் எதிர்பார்க்காத சங்கிலி
“மகாராணிக்கு என் மேல் கோபம் போலிருக்கின்றதே” என யாதும் அறியாதவனாய்க் கேட்டான்.
“நீங்கள் செய்த செயலுக்கு உங்களை கட்டியணைத்து முத்தமிடவா முடியும்?” என முகத்தைத் திருப்பாமலே கேட்டாள்.
“ஏன் நான் என்ன தப்புச் செய்து விட்டேன்?”
“சோழியர்புர பகுதிக்கு ஏன் அடிக்கடி செல்கிறீர்கள்”
“அரசாங்க அலுவலாக…”
“அரசாங்க அலுவலா? அல்லது அப்பாமுதலியின் மகளா?” நடந்த விடயங்கள் எவ்வாறோ இவளுக்கு தெரிந்துவிட்டது. இனி கெஞ்சுவதைத் தவிர வழியில்லை என நினைத்துக் கொண்டான் சங்கிலி. ஒரு ஆண் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள். ஆனால் தன்னை விடுத்து வேறொரு பெண்மீது தன் கணவன் நாட்டங்கொண்டிருக்கின்றான் என்பதை எந்தப்பெண்ணும் தாங்கிக் கொள்ள மாட்டாள். பஞ்சணையில் இருந்து எழுந்து வந்த சங்கிலி மீண்டும் அவளை அணைத்து அவள் முகவாயைப்பிடித்து தன்னை நோக்கித் திருப்பி, உண்மையை மறைத்து



“நீ நம்புகிறாயா?” என ஒரு கேள்வியைக் கேட்டு அவள் இதழில் தன் இதழை ஆழமாகப்பதித்தான். இங்கு தான் இருக்கின்றது பெண்களின் பலவீனம். சற்று நேர இன்பத்தால் திக்குமுக்காடிப்போன தேவி கொஞ்சம் மனம் கனிந்து அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு விம்மத் தொடங்கினாள். அவளை மெதுவாகப் பஞ்சணையில் அமர வைத்த சங்கிலி அவள் குழல்களை ஆதரவாகத் தடவினான். கணவனது நெருக்கத்தால் பெரிதும் மகிழ்ந்து எல்லாவற்றையும் மறந்து கணவனுக்கு கீழ்ப்படிகின்ற குணம் மட்டும் பெண்களுக்கு இல்லையானால் அன்று சங்கிலி தப்புவது பெருந்திண்டாட்டமாய் போயிருக்கும். சிறிது நேரத்தின் பின் புன்றுவல் பூத்தாள் மாதேவி.
“ஏன் நகைக்கிறாய் தேவி?” என வினவிய சங்கிலி அவள் கைகளை நன்றாக அழுத்திக் கொடுத்தான்.
“ஒன்றுமில்லை” என்ற அவள் சற்றே அசைந்தாள்.
“பின் ஏன் நகைக்கிறாய்?”
“நகைக்கக் கூடாதா?”
“கூடாது”
“நகைத்தால் என்ன செய்வீர்கள்?”
“கன்னங்களைத் திருகி விடுவேன்”
“திருகுங்கள் பார்ப்போம்” அவன் கன்னத்தில் கைவிரல்கள் இரண்டை வைத்து அழுத்தினான். அவள் மேலும் நகைத்தாள்.
“இன்னும் உறைக்கவில்லையா?”
“இல்லை”
“இன்னும் அழுத்திக்கிள்ளுவேன்”
“கிள்ளுங்கள்” அவன் அவள் கன்னத்தை சற்று அழுத்தியே கிள்ளினான். அவள் பதிலுக்கு அவனுடன் அதிகமாகவே இழைந்தாள்.
“என்ன இவ்வளவு தான் கிள்ளுவீர்களா?” என்று கேட்டாள். அவன் அவள் கன்னத்தை திரும்பிப் பார்த்தான். கிள்ளிய இடம் சற்று சிவந்திருந்தது.
“சே! சற்று அழுத்திக் கிள்ளிவிட்டேன்” என்று வருந்தினான் சங்கிலி.
“பின் பொய்யாகவா கிள்ளுவீர்கள்”
“அப்படித்தான் கிள்ள நினைத்தேன்”
“அதிலென்ன பிரயோசனம்”
“வலிக்கக் கிள்ளினால் தான் உனக்குப் பிடிக்குமா?”
“ஆம்”
“ஏன்?”
“கணவன் கணவனாக இருக்க வேண்டும். கணவன் மனைவியை அடிப்பதும் இன்பம், கிள்ளுவதும் இன்பம், அணைப்பதும் இன்பம்”
“தூங்கு தேவி” உடலைத்தடவினான்.
“தூக்கம் வரவில்லை”
“எனக்கு மட்டும் வருமா தேவி?”
“எது?”
“தூக்கம்” இந்தப்பதிலை கேட்ட தேவி மெல்ல நகைத்தாள். இரகசியமாக
“உம் வராது… வராது” எனச் சொன்னாள். அவள் சொற்களில் குழைவிருந்தது. அடுத்து வந்த ஆனந்தத்தில் நிறைவிருந்தது. மறுநாள் ஓர் அவசர செய்தியுடன் சங்கிலியைத் தேடி நண்பன் வீரமாப்பாணன் வந்தான்.

சாதிக்க வருவான்…

0 comments:

Post a Comment