Pages

Monday, March 29, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 14 கலகங்கள்)


வாழ்க்கை என்பது ஒரு வட்டத்தைப் போன்றது. அதில் பருவகாலங்களைப் போல மாறி மாறி இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். ஆனால் சங்கிலியின் வாழ்க்கையில் சோதனைகளும் வேதனைகளுமே நிறைந்திருந்தன.

மந்திரி பிரதானிகள் சூழ சங்கிலி யாழ்ப்பாணப் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடலில் சபா மண்டபத்தில் ஈடுபட்டிருந்தான். தனிநாயக முதலியைப் பார்த்த சங்கிலி “என்ன முதன் மந்திரியாரே! நாடு சற்று குழப்பமடைந்து காணப்படுகின்றதே… என்ன நடக்கின்றது என்று சற்று விபரியுங்கள் பார்க்கலாம்” என்றான்.
“மறவன்புலவிலுள்ள மறவர்கள் அயற் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையிடுகின்றனர்”
“என்ன? மறவன்புலவில் கொள்ளையா?... நம் ஆட்சியில் கொள்ளையா? ஏன் என் மக்களுக்கு என்ன குறை? ஏதற்காக அவர்கள் இப்படியொரு காரியம் செய்கின்றார்கள்”.
“அரசே! அவர்கள் பரம்பரையினர் தென் இந்தியாவின் இராமநாத புரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உமது மூதாதையர் ஆட்சியில் இங்கு குடியேறினார்கள். இப்பொழுது நமது அரசிற்கு நாலாபக்கத்திலிருந்தும் பகை கிளம்புகின்றது. அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கலகம் விளைவிக்கும் நோக்குடன் சூறையாடல்களில் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். அரசே, இவர்களை அடக்காவிடின் கொள்ளையும், களவும் குறைய மாட்டாது” என்றார் முதன்மந்திரி.

சங்கிலி தனது தளபதியாரைப் பார்த்து “தளபதி இதற்கொரு முடிவு கட்ட வேண்டும். இவ்விடயத்தை நீர் கவனித்துக் கொள்ளும்” என்றான்.
“ஆகட்டும் அரசே! சின்ன விடயம். எங்கள் வீரர்களை அனுப்பி அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுகின்றேன்” என்றான் இமையாணன்.
அதன்படி தளபதியின் கட்டளையின் பேரில் சென்ற வீரர்கள் சூறையாடல்களில் ஈடுபட்டிருந்த மறவர்களை சிறை செய்தனர். பயந்தோடிய மறவர்கள் காட்டுப்பகுதிகளில் ஒழிந்து கொண்டனர். இந்தக் காலப்பகுதிகளில் தொண்டைநாட்டிலிருந்து பன்னிரண்டு கருணீகரும் தம் குடும்பங்களுடன் வந்து யாழ்ப்பாணம் சேர்ந்தனர். இவர்கள் வருகை ஏதாவது சூழ்ச்சியுடன் இருக்குமோ என சங்கிலி ஐயப்பட்டான். அதனை தன் அரச சபைக்கும் தெரியப்படுத்தினான்.
“அரசே! அவர்கள் இயற்கையாகவே அறிவை நிரம்பப் பெற்றவர்கள். அவர்கள் இங்கிருப்பதால் நமக்குத் தான் பெருமை. அவர்கள் இப்படியான சிறுமையான, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்” என எல்லோரும் ஆதரவு கூறினார்கள். அதன்படி அவர்களுக்கு காடாயிருந்த கரணவாய் எனும் பிரதேசத்தை சங்கிலி கொடுத்தான். அதனை அவர்கள் பண்படுத்தி நீண்ட காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள்.

இதன் பின்னர், சிறிது காலத்தில் வடமராட்சிப் பகுதியில் கலகம் ஏற்பட்டது. இது பற்றி சங்கிலி கேட்டறிந்த போது தனிநாயக முதலி கூறினார் “கோப்பாய் தலைமைக்காரனும், அவன் ஆட்களும் வடமராட்சி கோயில் திருவிழா ஒன்றிற்கு சவாரி வண்டியில் போயிருக்கிறார்கள். புறாப் பொறுக்கியில் சிறிது தங்கிய போது, அவ்வூர் சிறுவன் ஒருவன் வண்டி மாட்டின் குஞ்சத்தை கழற்றியிருக்கின்றான். இதனை அவதானித்த கோப்பாய் தலைமைக்காரன், சிறுவனைப்பிடித்து தண்டித்து அனுப்பிவிட்டான்.

அந்தச் சிறுவன் உடுப்பிட்டி தலைமைக்காரனது மகன். இதனால் ஆத்திரமடைந்த உடுப்பிட்டி தலைமைக்காரனும், அவனது ஆட்களும் சம்பவ இடத்திற்கு வந்து கோப்பாய் தலைமைக்காரனையும் அவனது ஆட்களையும் நையப்புடைத்து அனுப்பினர். இதனால் வெகுண்ட கோப்பாய் காரர்கள் நல்லதொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து மீண்டும் உடுப்பிட்டிக்காரரை பழிவாங்கினார்கள். இதனால் மீண்டும் மீண்டும் அவர்களுக்குள் கலகம் ஏற்படுகின்றது. இதனால் அந்தப்பகுதிகள் எதொடர்ந்தும் பதற்றமாகவே காணப்படுகின்றன.”

“இரு தலைமைக்காரர்களையும் இங்கு வரவழைத்து விசாரிப்போமா?” என தளபதி இமையாணன் கேட்டான்.
“இல்லையில்லை, நானும் அங்கு அடிக்கடி செல்வதில்லை. இம்முறை அங்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டு தீர்ப்பதற்கு முடிவெடுத்துவிட்டேன்” எனச் சங்கிலி கூறினான்.

அதற்கமைய வடமராட்சி சென்ற சங்கிலி, அங்கு மக்களுடன் கலந்தாலோசித்து நிலமைகளை சுமூகமாக்கிவிட்டு மீண்டும் யாழ் நோக்கி வந்தபோது, கள்ளியங்காட்டெல்லையில் அவன் வண்டி தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் சினமுற்ற சங்கிலி காரணம் என்னவென வினவினான்.

அங்கு நின்ற காவலர் தலைவன் “இது பரநிருபசிங்கன் எல்லை, அதுதான் நிறுத்தும்படியாயிற்று” என தாழ்ந்த குரலில் கூறினான்.
“எப்பொழுதிலிருந்து?” சங்கிலி வினவினான்.
பதில் கூறமுடியாது காவலர் தலைவன் திணறினான். பின் சங்கிலியை தொடர்ந்தும் தடுக்க முடியாது என்பதால் அங்கிருந்து செல்லுமாறு கூறினான்.

அப்பாமுதலியின் வாக்குப்படி சங்கிலி மீதிருந்த வெறுப்பினாலேயே பரநிருபசிங்கன் அப்படியொரு கட்டளையை இட்டிருந்தான். இந்த சம்பவங்களால் ஆத்திரடைந்த சங்கிலி அரண்மனை சென்றதும் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவது எனத் தீர்மானித்துக் கொண்டான். அரண்மனையில் இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. உடம்பெல்லாம் எரிந்தது. உள்வீட்டிலிருந்து இப்படியான எதிர்பை அவன் எதிர்பார்க்கவில்லை. மனமுடைந்த அவன் நல்லூர் வடக்கெல்லையில் உள்ள குடிசையொன்றில் தங்கி இளைப்பாறினான்.

மாலைவரை யாரும் அவனைத் தேடி வரவில்லை. இரவு நெருங்க வீரனொருவன் விளக்கை மட்டும் குடிசையில் வந்து வைத்துச் சென்றான். இரவு ஏறியதும் பாயை விரித்துப்படுத்த சங்கிலி சிறிது நேரத்தில் உறங்கி விட்டான். நள்ளிரவு வந்தது, அவன் எதையோ நினைத்துப் சற்றுப் புரண்டான். புரண்டவன் சட்டென்று மலைத்தான். எழுந்திருக்கவும் முயன்றான். ஆனால் அவனை எழுந்திருக்க விடாமல் அழுத்தின இரு பூங்கரங்கள்.

“நீ எப்பொழுது வந்தாய் வடிவழகி?” அவன் கைகள் அவள் பூவுடலை வளைத்தன. அவள் புஷ்பம் போன்ற கைகளாகிய மாலை அவன் கழுத்தைச் சுற்றிச் சுழன்றது.
“இவ்விடம் உனக்கு எப்படித் தெரிந்தது?”
“உங்கள் நண்பர் கூறினார்”
“என்ன விடயத்திற்கு வந்தாய்?”
“நீங்கள் அரசாங்க அலுவல்களில் மூழ்கியிருப்பதால் என்னை மறந்து விட்டீர்கள். ஆனால் இந்தப் பேதையால் அவ்வாறு இருக்க முடியவில்லை. எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” எனக் கூறிய வடிவு, அவன் முரட்டு இதழ்களை தன் முல்லைப்பற்கள் இரண்டால் பற்றினாள்.

அவள் பூவுடல் வலிக்கும்படியாக சங்கிலி இறுக அணைத்துக் கொண்டான். அந்த வலியிலும் இன்பம் இருப்பதை உணர்ந்த வடிவழகி “ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசக்காரர்” என்றாள்.
“எவ்விடயத்தில்?...”
“பெண்கள் விடயத்தில்….”
“ஏன்?...”
“தனித்திருக்கும் பெண்ணை அணைக்கத்தான் தெரிகின்றது” எனக் கூறிய அவள் வெட்கத்தால் குனிந்தாள். அத்துடன் மல்லாந்து படுத்த நிலையில் ஒரு மோகப்புன்னகையில் சங்கிலியை பார்த்தாள். அப்புன்னகையில் அழைப்பிருந்தது.

அந்த இன்பமயமான வேளையில் யாழ்ப்பாணத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய புயல் ஒன்று யாழ் கரையை வந்தடைந்தது.

சாதிக்க வருவான்…

0 comments:

Post a Comment