Pages

Wednesday, April 28, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 18 -சங்கிலியின் கோபம்)


பெரிதும் சங்கடப்பட்டுக்கொண்டு கோட்டையினுள் நுழைந்த சங்கிலி தன்னை எதிர்பார்த்து தன் நண்பன் இருப்பதைக்கண்டதும் தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு
“என்ன மாப்பாணா! திடீரென்று வந்து நிக்கின்றாய்? என்ன விடயம்?” என்றான்.
“ஒன்றுமில்லை… அரச பதவி ஏற்றது முதல் நீ என்னுடன் ஊர் சுற்ற வரவில்லை. இப்பொழுது நாட்டு நிலவரம் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் சுமூகமாக இருக்கின்றது. வாவேன் நாங்கள் ஒருமுறை யாழ்ப்பாணத்தைச் சுற்றி வருவோம்” என ஆவலுடன் கேட்டான்.
தன் மனச்சஞ்சலங்களை தீர்ப்பதற்கு, அதை மறக்கடிப்பதற்கு இது ஒரு நல்ல ஏற்பாடு என்பதை அறிந்த சங்கிலி, அதற்கு உடன்பட்டான்.

முன்பனிக்காலத்து குளிர், உயிரினங்களின் நாடித்துடிப்புக்களையெல்லாம் மந்தப்படுத்தி நடுங்க வைத்துக்கொண்டிருந்தது. மரஞ்செடி கொடிகளின் இதய நரம்புகள் வரை பனியின் குளிரோட்டம் ஏறிவிட்டிருந்தபடியால் அவை அப்படியிப்படி அசையாமல் விறைத்துக்கிடந்தன. பனிக்காற்றிலுள்ள வரட்சித்தன்மை இலைக்கணுக்களிலிருந்த ஜீவரசத்தையெல்லாம் உறிஞ்சி, அவற்றை பழுத்து உதிரச்செய்து கொண்டிருந்தது. இமயமலைச் சிகரத்திலிருந்து இறங்கி ஓடிவந்தது போல் பனித்துளிகளைச் சுமந்த காற்று எங்கெங்கும் புகுந்து படிந்து எல்லாவற்றையும் ஈரமாக்கியது. அளவுக்கு மீறிய அந்தப் பனிக்குளிர் காற்றில் விறைத்துக்கொண்டு குதிரையில் தோழர்கள் யாழ் நகர் வலம் வந்தார்கள்.


குளிர்காலமாதலால் இருவருக்கும் ஓரளவு வசதியாகப் போய்விட்டது. வீதியோரங்களில் காவல் வீரர்களைத்தவிர பெரிதாக சனநடமாட்டம் இல்லை. இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட வீரர்கள் தெருக்களில் தலைதாழ்த்தி வணங்கினார்கள். தன் பக்கத்தில் நடுங்கியபடி குதிரையில் வந்துகொண்டிருந்த வீரமாப்பாணனைப் பார்த்த சங்கிலி “இனியாவது நீ எனக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கிறாயா பார்ப்போம்” என்றான். காலை நேரமாதலால் கோயில்களின் மணியோசையும், இசைப்புலவர்களின் பாட்டொலியும் யாழ் நகர் வீதிகள் தோறும் ஒலித்தன.

நீண்ட காலத்தின் பின்பு இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டு வந்த சங்கிலி, யாழ் நகரிற்கு தெற்கே கடலோரம் வந்தபோது அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு அருகில் வந்த நண்பனைப்பார்த்து
“மாப்பாணா! தூரத்தில் ஒரு கோட்டை போல தென்படுகின்றதே, அது என்ன?” என வினவினான்.
நிமிர்ந்து வடிவாக அதை உற்று நோக்கிய மாப்பாணன் “சந்தேகமேயில்லை… அது கோட்டை தான்” என்றான் கலவரத்துடன்..
“கோட்டையா?....... என்னிடம் அனுமதி பெறாமல் யார் கட்டியது… ஒருவேளை அண்ணனாக இருக்குமோ?”
“இல்லையில்லை… அவர் கட்டியிருந்தால் நம் வீரர்கள் மூலம் எப்படியும் தகவல் வந்திருக்கும்”
“பின் யார் கட்டியிருப்பார்கள்… நம் ஒற்றர்கள் கூட சொல்லவில்லையே!”
“இது பறங்கிகளுக்காக நாம் அளித்த பிரதேசம் சங்கிலி” என்றான் மாப்பாணன். இதனால் ஐயமுற்ற சங்கிலி “வா! அவ்விடம் சென்று பார்ப்போம்” என நண்பனுடன் அவ்விடம் சென்றான்.

மேற்கத்தேயப் பாணியில் மிகவும் கலை நேர்த்தியுடன் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட அக்கோட்டையை வர வர வியப்புடன் பார்த்து வந்த இருவரையும் இரு வீரர்கள் வழிமறித்தனர். தங்களை வழிமறித்த பறங்கி வீரர்களை கண்டு பெரிதும் சினமடைந்த சங்கிலி “டேய்! உங்கள் தளபதியெங்கே? நான் அவனை உடனடியாகக் காண வேண்டும்” என இடிமுடிக்கம் போல சத்தமிட்டான்.

அவ்விடம் வந்த பறங்கியத் தளபதி பிரகன்ஸா “என்ன அரசே! ஆச்சரியமாக இருக்கின்றதா? இது நாம் கட்டிய சிறிய வீடு. நீங்கள் வருவீர்களென்று தெரிந்திருந்தால் தாரை தப்பட்டைகளுடன் தடபுடலாக அழைத்திருப்போமே” என இகழ்ச்சியுடன் கூறினான்.
“என்ன காரியம் செய்தாய் பிரகன்ஸா? உனக்கு கோட்டை கட்ட யார் அனுமதியளித்தது” என கண்கள் தீயென சிவக்க சங்கிலி கேட்டான்.
சிறுதும் பயப்படாமல் “நீயே தந்தாய்….” எனப் பறங்கியத் தளபதி கூறினான்.
“நானா?...”
“ஆம்”
பறங்கியரின் நோக்கத்தை புரிந்து கொண்ட சங்கிலி, “அடேய், அயோக்கியப் பயலுகளே! இப்போதே கோட்டையை இடித்துவிட்டு மரக்கலமேறி உங்கள் ஊருக்கு செல்லுங்கள்” என ஆணையிட்டான்.

அவன் ஆணையைக் கேட்ட பிரகன்ஸா பெரிதாக நகைத்து “நாம் இடிக்கப் போவதில்லை, முடிந்தால் நீ இடித்துப் பார்” எனச் சவாலிட்டான். இதனால் வெகுண்ட சங்கிலி
“உன் கபடத்தை நானறிவேன். முடிந்தால் உன்னைக் காப்பாற்றிப் பார்” என வீராவேசமாகக் கத்திவிட்டு தன் நல்லூர்க் கோட்டையை வந்தடைந்தான். அவசர அவசரமாகச் சபையைக் கூட்டி நடந்ததை விளக்கினான். அத்துடன் கோபம் கொப்பளிக்க பரநிருபசிங்கனைப் பார்த்து “பார்த்தாயா உன் யோசனையை? நம் நாட்டின் பாதுகாப்பிற்கே பெரிய பங்கம் ஏற்பட்டு விட்டது. இப்பொழுது வேறு வழியில்லை, படையைத் திரட்டுவதைத் தவிர” என்றான். கூடவே தளபதிக்கு யுத்தத்திற்கு தயாராகவும் ஆணையிட்டான்.

இதனை ஏற்றுக் கொண்ட யாழ் தளபதி இமையாணன், அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கலானான். நடக்கவிருக்கும் போரையும், அதனால் ஏற்படப்போகும் அழிவுகளையும் நினைத்துப் பார்த்த சங்கிலி பெரிதும் கவலையுற்றவனாய் தன் சயன அறை நோக்கிச் சென்றான். அங்கு அவனது சினத்தை கூட்டக்கூடியதான ஒரு நிகழ்ச்சி காத்திருந்தது.

சாதிக்க வருவான்…

Friday, April 16, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 17-வெண்புறா)


நீலவான் நெடுமஞ்சத்தில் ஆடையற்ற நிலவுப் பெண் மோகாவேச போதையுடன் அழகாகப் படுத்துக்கிடந்தாள். அவ்வப்போது தன் குலைந்த தோற்றத்தைக் கண்டு நாணிக் கண்புதைத்து ஓடி வெண்முகில் ஆடையை இழுத்துப் போர்த்திக் கொள்கின்றாள். அவள் போர்வை கொள்ள மறுத்தாலும் அவளுடைய மூத்த சகோதரியான காற்றுப் பெண் அரக்கப் பறக்க ஓடிவந்து கருநிற முகில்களை இழுத்து அவளை மூடி உள்ளே அனுப்பி விடுகிறாள்.

ஒன்றின் துன்பத்தைக் கொண்டு இன்னொன்று இன்பம் அனுபவிப்பது நடைமுறைத்தத்துவம் அல்லவா? விரக வேதனையுறும் வெண்ணிலவின் காம ஒளியால் உலகம் ஓர் ஒப்பற்ற காட்சியைச்சாலையாக திகழ்ந்தது. எங்கும் அழகின் பூரிப்பு. இந்த இயற்கையைப் பருகிக் கொண்டு நின்ற சங்கிலி தனக்கு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த யமுனா ஏரியின் குளிர் நீரில் தன் கால்களை அலசிக் கொண்டான்.

இயற்கையின் இன்பப் பூரிப்பால் திளைத்திருந்த சங்கிலி திடீரென்று வீசிய சுகந்த வாசனையால் பெரிதும் கவரப்பட்டு அது என்னவாக இருக்கும் என அறிய ஆவலில் தலையைத் திருப்பியவன்.. திருப்பியபடி திகைத்து நின்றான். அவன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அந்த அழகுச்சிலை மெதுவாக சங்கிலியை நெருங்கி வந்தது. இதனால் பெரிதும் சஞ்சலமடைந்த சங்கிலி “இவள் இங்கு எதற்கு வருகிறாள்? அன்று அரச சபையில் பார்த்ததை விட எத்தனை மடங்கு அழகாக இருக்கிறாள்” என நினைத்துக் கொண்டான்.

பக்கத்தில் வந்துவிட்ட அந்த பறங்கியப் பெண்ணை தீராத ஏக்கத்துடன் ஒருமுறை கண்களால் அளவெடுத்தான் சங்கிலி. வெளேரெனத் தெரிந்த அவள் கன்னப் பகுதிகளும் கழுத்தும் இருந்த வழவழப்பு சலவைக்கல்லுக்குக் கூட இராதென்று நினைத்தான். சிவந்த சிறு பூவைப் போலிருந்த உதடுகளில் தெரிந்த ஈரம் அவற்றுக்கு தனி மெருகைக் கொடுத்து தேனை உள்ளடக்க முடியாத மலரிதழ்களுக்கு உவமை காட்டியது. வெள்ளைக்காரியாதலால் அவள் கேசம் தங்கநிறம் பெற்றிருந்தது. கண்களும் இமைகளும் வெள்ளைக்கன்ன முகப்புகளில் படுத்துக்கிடந்தன. திண்ணிய மார்பும் இருபுறமும் உட்புறமாக வழித்துவிடப்பட்ட இடைப்பகுதியும் லேசாக எழுந்து பிறகு கீழ்ப்புறம் விர்ரென்று சரிந்து இறங்கிவிட்ட வயிறும் சற்றே அகன்று கிடந்த அழகுக் கால்களும் ஏதோ புதுத் தேவதை மண்ணில் இறங்கியதைப் போல அவளைக் காட்டியது.

தன்னை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்ததை ரசித்த வெள்ளைக்காரி பெரிதும் மகிழ்ந்து அவன் அருகில் வந்து தன் அழகுகள் அவன் மீது உராயும் வண்ணம் நெருங்கி நின்றாள். இதனால் பெரிதும் கலவரமடைந்த சங்கிலி சிறு நிதானத்துடன் சற்று விலகி “தேவி இங்கு வந்திருக்கும் காரணம் யாதென அறியலாமா?” எனப் பெரும் சிரமத்தின் மத்தியில் வாயிலிருந்து சொற்களை உதிர்த்தான்.

“உன்னைப் பார்க்கத்தான்” என்ற வெள்ளைக்காரியின் உரையாடலில் கொஞ்சமும் மரியாதை இல்லாததை கவனித்த சங்கிலி உள்ளுக்குள் எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு “என்ன விடயம் தேவி?”
“உன்னைப் பார்க்க வேண்டும் போலத் தோண்றியது, அது தான்..” என அவன் உடலுடன் மீண்டும் உராய்ந்தாள்.

என்ன செய்வதென்றறியாத சங்கிலி உணர்ச்சிகள் கட்டுமீறிப் போவதை உணர்ந்து கொண்டதுடன் தன்னைச் சமாளித்துக் கொண்டு “ஏன் தேவி?” எனக் கேட்டான்.
அவன் தன்னை நிமிடத்துக்கு ஒரு தடவை ‘தேவி!’ என்றழைப்பதை விரும்பாத அவள் “நீ என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாம்” என்றாள்.
“முன் பின் தெரியாதவர்களை எவ்வாறு பெயர் சொல்லி அழைக்க முடியும்?”
“பழகிக் கொள்”
“எனக்கு உன் பெயர் தெரியாதே” எனச் சங்கிலியும் மரியாதையைக் கைவிட்டான். சற்று யோசித்த அவள் “ஓ! உனக்கு என் பெயர் தெரியாதல்லவா?” எனக் கேட்டாள்.
“ஆம்”
“எலியானா”
“நல்ல பெயர்”
“நீ வேண்டுமானால் என்னை ‘எலி’ என சுருக்கியும் அழைக்கலாம்”
“ஹா ஹா! அவ்வாறு கூப்பிட்டால் நம்மூரில் அசிங்கமாகிவிடும்.” என நகைப்புக்கிடையில் கூறினான். அவன் ஏன் நகைக்கின்றான் என்பதை அறியாத எலியானா, அவன் தோள் மீது தன் இரு கைகளையும் போட்டாள்.
“இது முறையல்ல..” என்றான் சங்கிலி.
“எது?”
“இவ்வாறு ஆடவர் மேல் கை போடுவது”
“அதனாலென்ன?”
“இல்லை! நான் திருமணம் ஆனவன்”
“அதனால்…??” என குதர்க்கமாக பேசிய எலியானா “உன்னைப் போல் அழகனுக்கும் வீரனுக்கும் எங்களுரில் ஆயிரம் பெண்டாட்டிகள் இருப்பார்கள்” என்றாள்.
“இங்கு அவ்வாறில்லை”
“உன்னை என்ன ஆயிரம் பெண்ணையா திருமணம் செய்யச் சொன்னேன். என்னை மட்டும் தானே? அதுவும் திருமணம் அல்ல.. சில நாட்கள் என்னுடன் சந்தோஷமாக இரு. பிறகு நான் எங்கள் ஊர் சென்று விடுவேன்” எனக் கூறினாள்.
“தப்பு”
“எது?”
“அப்படிச் செய்வது”
“உங்கள் ஊர் அரசர்களும் அப்படித் தானே!”
“நான் அவ்வாறல்ல…” வடிவழகி மீது கொண்ட தீராத காதலே தன்னை இவ்வாறெல்லாம் பேச வைக்கின்றது என்பதை உணர்ந்த சங்கிலி “வடிவழகி மட்டும் இல்லையெனில், இப்பொழுது என்னவாயிருக்கும்” என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டான்.

தனக்கு மசியாமல் தன்னுள்ளேயே சிரித்துக் கொள்ளும் சங்கிலியைக் கண்ட எலியானா ஆத்திரத்துடன் அவனை இறுக அணைத்துக் அவன் இதழ்களுடன் தன் பூவிதழைப் பதித்தாள். திடீரென நடைபெற்ற இந்நிகழ்ச்சியால் பெரிதும் கலவரமடைந்த சங்கிலி வெடுக்கென எலியானாவை பிடித்துத் தள்ளிவிட்டு அரண்மனை நோக்கிச் சென்றான்.

நிலத்தில் விழுந்த எலியானா “உன்னை அடையாமல் விடமாட்டேன்” என மனதில் கறுவிக்கொண்டாள். தன்னை வருங்காலத்தில் காப்பாற்றப் போகின்றவள் அவளென அறியாத சங்கிலி கோபத்துடன் அரண்மனை சென்ற போது அங்கு நண்பன் மாப்பாணன் ஒரு செய்தியுடன் காத்திருந்தான்.

சாதிக்க வருவான்…


Thursday, April 1, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 16-பறங்கிக் கோட்டை)


இளவேனிற் காலத்தின் சுகந்தவளி சுகமாக வீசிக் கொண்டிருந்த ஒரு பொழுது, தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் போல நிகரற்ற சௌந்தர்யத்துடன் மலர்கள் மொட்டு விரித்து முறுவலித்துக் கொண்டிருந்தன. உதிர்ந்த மலர்களை மரகத வண்ணப் பசும்புல் தரை ஏந்தி தன் மடியில் கிடத்திக் கொண்டு தாய்மை எழிலுடன் காட்சி தந்தது. அவ்வற்புத அழகு இரகசியங்களை கவிதையாக்கி தம் தீங்குரலால் வானவர்க்குப் பாடிக் காட்ட வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் நீல விண்ணின் விசும்பு மேல் ஏற முயன்று முயன்று தோல்லியடைந்து கொண்டிருந்தன சில வானம்பாடிகள்…

இந்த அற்புதங்களையெல்லாம் தாங்கி வீராப்புடன் நிமிர்ந்து நின்றது யாழ் மண். வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற பறங்கியர்கள் தமது மரக்கலம் சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தாம் கொண்டு வந்த பொருட்களை நகருக்குள் விற்றுச் சென்றனர். இவ்வாறே சில காலங்கள் சென்றன. பின் அவர்கள் தாம் தந்த வேலையைக் காட்டத் தொடங்கினர்.

பறங்கிய முக்கிய தலைவர்களுடன் கலந்தாலோசித்த தளபதி பிரகன்சா அவர்களைப் பார்த்து “இப்பொழுது சங்கிலிக்கு எம்மீது பூரண நம்பிக்கை வந்துவிட்டது. இதனால் இனி நாம் வந்த வேலையைக் காட்டத் தொடங்கலாம்.” எனக் கூறினான்.

“அதற்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?” பறங்கிய முக்கிய தளபதிகளில் ஒருவனான தொன்பிலிப்பு கேட்டான்.
“நாம் மெதுவாக மரக்கலங்களை விட்டு நகருக்குள் காலூன்ற வேண்டும்”
“முடியுமா?”
“முயன்றால் முடியும். எம்மீது உள்ள நம்பிக்கையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சங்கிலியிடம் சென்று நமக்காக நிலம் கேட்க வேண்டும்.”
“அவன் கடுமையானவனாயிற்றே! நமக்கு அனுமதி தருவானா?”
“கேட்கின்ற விதத்தில் கேட்டால் நிச்சயம் தருவான். அந்த வேலையை நான் பார்த்துக் கொள்கின்றேன். நாம் முதலில் நல்ல ஒரு நாளில் சங்கிலியை சந்திக்க வேண்டும்”
“வெறுங்கையுடன் சென்று சந்தித்தால் அவ்வளவு நல்லாயிராதே!”
“அதற்கும் ஏற்பாடு செய்து விட்டேன். இந்தியாவிலிருந்து விலையுயர்ந்த திரவியங்களை இறக்குமதி செய்து விட்டேன்.” எனப் பெருமையுடன் கூறினான் பிரகன்சா.
“அப்படியா! மிகவும் மகிழ்ச்சி. நாம் விரைவாகவே சங்கிலியைச் சந்திப்போம்” என்றான் தொன்பிலிப்பு.

பறங்கிகள் தமக்குள் நடந்த ஆலோசனையின்படி இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட விலையுயர்ந்த பட்டாடைகள், பல வாசனைத்திரவியங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் சங்கிலியை கோட்டையில் வந்து சந்தித்தார்கள்.
“என்ன வீரர்களே! யாழ்ப்பாணத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? ஏதாவது வசதிக்குறைவு ஏற்பட்டுவிட்டதா?” என வந்திருக்கும் பறங்கியர்களை ஒருமுறை அலசிப்பார்த்து கேட்டுக் கொண்டான். வந்திருந்தவர்களில் அன்று வந்த வெள்ளைக்காரியைக் காணாததால் சிறு ஏமாற்றத்துடன் சம்பாசனையைத் தொடர்ந்தான்.
“இல்லைப் பிரபு! உங்கள் உதவியால் நாம் பெரிதும் மகிழ்ச்சியாகவே உள்ளோம். உங்களுக்கு நிறையவே கடன் பட்டுள்ளோம். அதற்கான சிறிய உபகாரமாக நாம் கொண்டு வந்திருக்கும் பொருட்களை ஏற்க வேண்டும்” என பிரகன்ஸா கூறினான்.


அவன் வேண்டுகோளின் படி அப்பொருட்களை ஏற்றுக் கொண்ட சங்கிலி “உங்களுக்கு ஏதாவது குறை ஏற்படுமிடத்து தயங்காமல் என்னிடம் தெரிவியுங்கள்” எனக் கூறினான்.

நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பறங்கியத் தளபதி “மகாராசாவே! பகலெல்லாம் உணவின்றி நகருக்கு வந்து வர்த்தகம் செய்தவிட்டு இரவில் எங்கள் மரக்கலங்களுக்கு சென்று போசனஞ் செய்து நித்திரை கொள்கின்றோம். அது பெருங்கஷ்டமாகவே இருக்கின்றது. ஆதலால் நாம் கரையிலேயே ஒரு வீடு கட்டி அதிலிருந்து நகர்வந்து வர்த்தகம் செய்ய அனுமதி தரவேண்டும்” எனத் தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டான்.

இவ்வேண்டுகோளைக் கேட்ட சங்கிலி தனது சந்தேகக் கண்களை தனது தளபதி மீது நாட்டினான். அவன் கண்களிலும் சஞ்சலம் நிறைந்திருப்பதைக் சங்கிலி கண்டான். இதனை அவதானித்த சபையிலிருந்த பரநிருபசிங்கன் “சங்கிலி என்ன யோசிக்கின்றாய்? அவர்கள் கேட்பது நியாயம் தானே! பாவம்! அவர்களுக்கு இந்தச் சிறு உதவியையாவது செய்யாவிடின் நாம் மனித இனம் என்பதை வெளியில் கூறமுடியாது. இதற்கு அனுமதியை வழங்கு” எனக் கூறினான்.

“இல்லை அண்ணா!...” எனத் தொடங்கிய சங்கிலியின் வார்த்தையை இடைமறித்த மந்திரி அப்பாமுதலி “அண்ணா சொல்வது சரி, சங்கிலி அவர்களுக்கு அனுமதி வழங்கு” எனக் கூறினார். வேறு வழியில்லாது முதன் மந்திரி தனிநாயக முதலியும் சங்கிலியை அனுமதி வழங்குமாறு கூறினார். சபையினரது ஆலோசனைக்கு ஏற்ப சங்கிலியும் பறங்கியினருக்கு மிருகங்கள் சஞ்சரிக்கும் அடர்ந்த காடாயிருந்த பண்ணைக் கடலுக்கு சமீபமான நிலப்பரப்பை வழங்கினான்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்ற பறங்கிகள் காடாயிருந்த அப்பிரதேசத்தை துரிதமாக துப்பரவு செய்து, வீடு கட்டுவது என்ற போர்வையில் மண்ணாலான சிறு கோட்டை ஒன்றைக் கட்டினார்கள். காலப்போக்கில் அதைப் பலப்படுத்திக் கொண்டார்கள். கோட்டையின் பாதுகாப்பிற்காக பெரிய அகழிகளைத் தோண்டினார்கள். அத்துடன் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், போதியளவு சேர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிலிருந்து படைவீரர்களையும் கடல் மார்க்கமாக வரவழைத்துக் கோட்டைக்குள் இருத்திக் கொண்டார்கள். இந்த நடவடிக்கைகள் சங்கிலிக்கு புலப்படாத வகையில் வழக்கம் போல நகருக்கு வந்து வர்த்தகம் செய்து வந்தார்கள்.

யாழ்ப்பாணம் எதிர்நோக்கியிருந்த பேரவலத்தை அறியாத சங்கிலி நிம்மதியாக யமுனா ஏரியின் அழகைப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனை நோக்கி வந்தது பேரழகு அதிர்ச்சி.

சாதிக்க வருவான்…