Pages

Sunday, November 6, 2011

மீண்டும் தொடர்கிறான் யாழ் மன்னன் “சங்கிலி”


தலைப்பை பார்த்ததும், ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே வரோவை பதிவுலகில் பின் தொடர்பவர்கள் “அட! மீள் பதிவா? மறுபடியும் முதல்ல இருந்தா?” என வாயில் விரலை வைக்காதீர்கள்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் “சங்கிலியன்” என்பது வரலாறு அறிந்த தமிழர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அவ்வரசனின் கம்பீரமான சிலை நல்லூர் ஆலயத்துக்கு வடக்குப் பக்கமாக அமைந்துள்ள வீதியில் வைக்கப்பட்டுள்ளது. (அண்மையில் கூட சிலை மாற்ற சர்ச்சைக்கு உள்ளாகியது)

சங்கிலியனின் வரலாற்றை நான் அறிந்த ஆதாரங்களுடன் கற்பனைகளை புகுத்தி ஒரு ஜனரஞ்சகமான வரலாற்று கதையாக கடந்த 2007ஆம் ஆண்டு எழுதியிருந்தேன். அதனை கடந்த வருடம் என் அகசியம் வலையில் ஏற்றத் தொடங்கினேன். சில காலங்களின் பின்னர் அத் தொடரை மட்டும் தனியாக ஒரு வலையில் ஏற்றினேன். முப்பது அத்தியாயம் வரை தரவேற்றியாகிவிட்டது. ஆனால் முடிக்கவில்லை.

மீண்டும் சரியாக ஒரு வருடத்தின் பின்னர் சங்கிலியன் வலையை தூசு தட்டியிருக்கிறேன். இத்தொடர் “க்ளைமாக்ஸ்” இல் தடைப்பட்டதற்கு காரணம் என் “லண்டன்” பயணம். இங்கு வரும்போது கதை எழுதிய அப்பியாசப்புத்தகத்தை இலங்கையிலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன். தற்போது அதை மீளப்பெற்றுவிட்டேன். அதனால் எஞ்சிய முக்கிய கடைசி இரண்டு பாகங்களையும் தரவேற்றவுள்ளேன்.

இதுவரை சங்கிலியன் தொடரை வாசித்த என் நண்பர்களும், இனி வாசிக்கப்போகும் நண்பர்களும் “சங்கிலியன் வலைத்தளத்தை” ஆரம்பத்திலிருந்து படித்தால் நல்லது.

இந்த தொடர் பற்றிய என் விளக்கங்களை சரிவர புரிந்து கொள்வதற்கு நிச்சயம் இதன் முன்னுரையைப் படிக்கவும்.

தொடர்ந்தும் என் முயற்சிக்கான உங்கள் பேராதரவை அன்புடன் எதிர்பார்க்கிறேன்.

Wednesday, October 13, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 30 – போர் ஆயத்தம்)

நகரையடைந்த சங்கிலியைக் கண்டதும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். உடனடியாகவே யாழ்ப்பாணம் எங்கும் இந்தச்செய்தி தீயென பரவிவிட்டது. அரண்மனைக்குள் அரக்கப்பரக்க ஓடிவந்த அப்பாமுதலியிடம், பரநிருபசிங்கன்
“என்ன மந்திரியாரே! என்ன விடயம்?”
“சங்கிலி வந்து விட்டான்”
“எந்தச்சங்கிலி?”
“அதுக்குள்ளேயே மறந்துவிட்டாயா? உன் தம்பி தானப்பா”
அதைக் கொஞ்சம் நம்ப மறுத்த பரநிருபசிங்கன் பயத்தால் வெல வெலத்து,
“பறங்கிகளிடம் இருந்து எப்படித் தப்பி வந்தான் அவன்?”
“அதெப்படி எனக்குத் தெரியும்! நீ இங்கிருப்பது ஆபத்து. உடனடியாக எங்காவது ஓடிவிடு”
“நீங்கள்….”
“நான் அவன் கால் கையிலாவது விழுந்து சமாளித்துக் கொள்வேன். அவன் தான் என் மகளைக் காதலிக்கிறானே” எனப் பெருமையாகச் சொன்னார் அப்பாமுதலி.
“இப்பொழுது என்ன செய்வது?”
“வன்னிக்காட்டுக்குள் ஓடிவிடு. வன்னியரிடமும் அகப்பட்டு விடாதே!” என்று எச்சரித்தார். பரநிருபசிங்கனும் சங்கிலியன் கைக்குள் அகப்படாமல் வேகமாக கோட்டையில் இருந்து தப்பிச் சென்று மறைந்தான்.

சங்கிலி வருகையை அறிந்த இராசமாதேவி படுக்கையில் இருந்து துள்ளியெழுந்து அவனைக் காணச் சென்றாள். சங்கிலி சிறைப்பட்டதிலிருந்து அவள் அன்ன ஆகாரமின்றி படுத்த படுக்கை தான். நன்றாக மெலிந்துவிட்டாள். வண்டியிலிருந்து இறங்கிய சங்கிலியை ஆதரவுடன் பிடித்து மஞ்சத்தில் இருத்தினாள்.
“பாவிகள்! இப்படிச் சித்திரவதை செய்திருக்கிறார்களே. இவர்களை தெய்வம் சும்மா விடாது” என அழுதாள்.
“தேவி! தெய்வத்தை வேண்டிப் பயனில்லை. நாம் தான் அவர்களைத் தண்டிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை துரிதமாகக் கவனிக்க வேண்டும்” என்றான் சங்கிலி.
“இந்த நிலையிலா?”
“ஆம்”
“சிறிது காலம் ஓய்வெடுங்களேன். உடம்பு புண்கள் சற்று ஆறட்டும்” என்று கூறியவள் ஏதோ நினைத்தாற் போல், “வடிவழகி அன்று கூறியவைகளை உங்களுக்குக் கூறி உஷாப்படுத்துவதற்கிடையி;ல் எல்லாம் முடிந்து போய் விட்டது” என்றாள்.
‘வடிவழகி’ என்ற சொல்லைக் கேட்டதும் கண்களை அகல விரித்துப் பார்த்த சங்கிலி,
“வடிவழகியா…!”
“ஆம்”
“அவள் எப்போது இங்கு வந்தாள்”
“நீங்கள் பிடிபடுவதற்கு முதன் நாள்”
“எதற்காக?”
“உங்களை எச்சரிக்க…”
“எது விடயமாக?”
“உங்களுக்கெதிராக தன் வீட்டில் சதி நடப்பதாக கூறினாள். அந்தச் சதியில் யார், யார் பங்குகொண்டார்கள் என்பதைக் கூறவில்லை”
“அது இப்பபொழுது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. வடிவழகி எங்கே?” என ஆவலுடன் வினவிய சங்கிலியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை தேவி கவனிக்கத் தவற வில்லை.
“அவள் வீட்டில் தான்”
அதற்குள் சங்கிலியை தேடி வந்த தோழன் மாப்பாணன் சங்கிலியின் நிலையைக் கண்டு பெரிதும் கவலையுற்றான்.
“மாப்பாணா நம் தளபதியெங்கே? வந்தது முதல் அவரைக் காணவில்லையே!”
தனது சோகத்தையெல்லாம் மனதில் அழுத்திக் கொண்ட மாப்பாணன்,
“எதற்கு?” எனக் கேட்டான்.
“போருக்காக நம் படைகளை மீண்டும் தயார்ப்படுத்த”
“இந்த நிலையிலா?”
“நான் மிகுந்த தேக ஆரோக்கியத்துடன் தான் இருக்கின்றேன்”
இதற்குள் இடைப்புகுந்த தேவி, “நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. நீங்களாவது சொல்லி இவரை ஓய்வெடுக்க வையுங்களேன்” எனக் கெஞ்சினாள்.
“அரசே! தேவி சொல்வதும் சரி தானே! கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்றான் நண்பன். ஆத்திரமடைந்த சங்கிலி, “எங்கே இமையாணன். அவனை வரச்சொல் நான் கதைக்கின்றேன்” என சற்று உரத்த தொனியில் கூறினான்.
“அவர் வரமுடியாது” தயக்கத்துடன் மாப்பாணன்.
“ஏன்”
“அவர் இப்பொழுது உயிருடன் இல்லை” எனக் கூறிய மாப்பாணன் அழுது விட்டான். இதைக்கேட்ட சங்கிலி தன் உயிரே போய்விட்டதைப் போல உணர்ந்தான். சோகமும், ஆத்திரமும் கொப்பளிக்க, “எப்படி?” என வினவினான்.
“உங்களைப் போலவே உங்களுக்கு பெரும் பலமாக இருந்த தளபதியையும் வஞ்சகமாக வெட்டிச் சாய்த்துவிட்டார்கள் துரோகிகள்”

இதைக்கேட்ட சங்கிலி செய்வதறியாது, “இப்படிப்பட்ட ஆயிரமாயிரம் வீரர்களின் கனவுகளுக்காவது நாம் உடனடியாக போரைத்தொடங்க வேண்டும். மாப்பாணா! இன்றிலிருந்து நீ எம்தேசத்தின் தளபதிப் பொறுப்பை எடு;த்துக் கொள். இது என் கட்டளை. விரைவாக செயற்படு. படைகளைத் தயார்ப்படுத்து. ஒரு கணமும் ஓய்வெடுக்க நேரமில்லை. மிக விரைவில் போர் தொடங்கும்” என்றான். மன்னனை வணங்கி விடைபெற்றுச் சென்ற வீரமாப்பாணன் போருக்கான ஆயத்தங்களைக் கவனிக்கலானான். குறுகிய காலத்தில் நிறைவான படையையும் திரட்டி விட்டான். மன்னனைக் கண்ட நாட்டு மக்கள் தாமாக விரும்பி படைகளில் இணைந்து கொண்டனர். நல்லூர் கோட்டையில் எந்நேரமும், வாள்களும் வேல்களும் செய்யும் ஓசை ‘ணங்… ணங்…’ என கேட்டுக் கொண்டே இருந்தது. மீண்டும் சங்கிலியனின் படை விடியலுக்கான போரை நோக்கி ஆயத்தமாகியது.

சாதிக்க வருவான்…