Pages

Sunday, May 16, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 19 சிக்கல் சந்திப்பு)


கார் காலத்து கருமேகங்கள் சூழ் கொண்ட இளம்பெண்ணைப் போல் வான வெளியில் மெல்ல மெல்ல நீந்திச் சென்று கொண்டிருந்தன. வானின் பசுமை ஒளியைக் கரு முகிற் படலம் மறைத்துவிட்டிருந்ததால் அந்தக் குளிர்ந்த மாலை நேரம் தன் வனப்பை இழந்து வெளிறிக் காணப்பட்டது. மழை மஞ்சுக் கூட்டங்களின் மேல் புரண்டு வந்த காற்று, சங்கிலியின் அழகிய கோட்டையைத் தழுவிச் சென்றது. சிந்தனை என்னும் செந்தழலில் வெந்து தீய்ந்து கொண்டிருந்த சங்கிலி அந்த வேக்காட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தன் பள்ளியறை சென்றான்.

கதவினைத் திறந்த சங்கிலிக்கு கட்டிலில் இருந்த அழகைக் கண்டவுடன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. விறு விறுவென அதனை நோக்கிச் சென்ற அவன்,
“நீ எப்படி இங்கு வந்தாய்?” என வினவினான்.
“ஏன் வரக் கூடாதா? என அவ்வழகு வினவியது.
“எலியானா! என்னுடன் விளையாடாதே. உன்னை இங்கு வர யார் அனுமதித்தது?”
“யார் அனுமதிக்க வேண்டும்?”
“காவல் பலமாகவிருக்கின்றதே!”
“அதனாலென்ன…”
“உன்னை ஒருவரும் தடை செய்யவில்லையா?”
“பல பேர் என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே அசடு வழிந்து விட்டு விட்டார்கள். விசாரிக்க நினைத் ஒரு சிலரையும் தங்க நாணயங்கள் கொண்டு மயக்கி விட்டேன்” என அவனைப் பார்த்து மோகனப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.
“நீ நினைப்பதைப் போல் என்னை இலகுவில் மயக்கிவிட முடியாது” என்றான் சங்கிலி.
“அதையும் பார்ப்போமே!” என்று இளக்காரமாகச் சொன்னால் எலியானா.
“ஏன் கால் கடுக்க நிற்கின்றீர்கள். இப்படி அமருங்கள்.” என தான் சற்றுத் தள்ளி பஞ்சணையில் சங்கிலி அமர்வதற்கென ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தாள். அதில் உட்காராமல் சங்கிலி நின்றதைப் பார்த்ததும் “பரவாயில்லை, நானும் எழுந்து நிற்கின்றேன்” என எழுந்து சங்கிலியின் கையைப் பற்றினாள். அவ்வாறே அவனையும் இழுத்து மஞ்சத்தில் விழுத்திவிட்டு அவர் மார்மேல் படுத்தாள். அவள் இன்பங்கள் தன்மீது பட்டதால் சங்கிலி பெரிதும் சஞ்சலமடைந்தான். ஆனாலும் அவளைத் தள்ளிவிட அவன் கைகள் எழவில்லை. மாவீரனான சங்கிலிக்கு எலியானாவைத் தள்ளுவது பெரிய வேலையா என்ன! ஆனால் அவன் இருந்த நிலைமையில் அவனால் முடியவில்லை. இதனை அவதானித்த எலியானா சங்கிலியின் மனது சஞ்சலமடைவதை உணர்ந்ததால் மெல்ல எழுந்து தனது ஆடைகளை களைய ஆயத்தமானாள். இந்த நேரத்தில் சுதாகரித்துக் கொண்ட சங்கிலி

“உனக்கென்ன பைத்தியமா?” எனக் கூவினான்.
அவனது அதட்டலான வார்த்தையினால் தான் செய்ய எண்ணிய செயலை நிறுத்தினாலும், அந்தக் குரல் அவள் மந்தகாசத்தை அதிகமாக முகத்தில் பரவவிட்டன. அவள் கண்கள் சிரித்தன. அவனை உற்று நோக்கி உதடுகள் உரைத்தன “யாருக்கும் பைத்தியமில்லை”
சங்கிலி அவளை சுட்டுவிடுபவன் போலப் பார்த்தான்.
“உன்னைத் தவிர வேறு யாருக்கும் பைத்தியமில்லை” என்று சீறினான்.
“தவறு காதலரே தவறு” என்றாள்.
“என்னை அப்படி அழைக்காதே”
“எப்படி?”
“இப்போது அழைத்தாயே, அப்படி”
“எப்படி அழைத்தேன்”
“அது தான் காதலரே என்று….” அவன் வார்த்தையை சொல்ல முடியாமல் தத்தளித்தான்.
அவளின் நீள விழிகள் அவனை மீண்டும் நிமிர்ந்து நோக்கின “ஒரு சொல்லைச் சொல்ல இத்தனை பயமா?” என்று வினாவினாள்.
“பயமொன்றுமில்லை”
“இருக்கின்றது”
“என்ன காரணம்?”
“நான் உங்களைக் காதலிக்கும் அளவிற்கு நீங்களும் என்னைக் காதலிக்கின்றீர்கள்”
“இல்லை… பொய்…. பொய்”
“உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள்”
“இல்லை, முடியாது” பலமுறை கூவினான்.
“நான் வடிவழகியாக இருந்தால்….” இந்த வார்த்தையால் நிதானத்திற்கு வந்த சங்கிலி “இந்தப் பெயர் உனக்கெப்படித் தெரியும்?”
“விசாரித்தேன்”
“யாரிடம்?”
“பலரிடம்”
“ஏன்?”
“ஒரு ஆடவனிடம் தானாக வலிய வந்து ஒரு பெண், அதுவும் அழகான பெண்… தன்னைக் கொடுக்கும் போது… வேண்டாம்… என்று கூறுகிறானெனில் அவன் வேறு யார் மீதோ தீராத காதலில் இருக்கின்றான் என்று அர்த்தம். இந்த வீரன் யாரைக் காதலிக்கின்றான் என்று அறியும் ஆவலுடனேயே நான் விசாரித்தேன்”
“உனக்கென்ன அக்கறை?”
“எனக்கு நீ வேண்டும்”
“அது தான் இப்போது உனக்கு புரிந்து விட்டதே. என் மனம் யாரிடமென்று… வீணாக முரண்டு பிடிக்காமல் சென்று விடு” என்று சங்கிலி கூறினான்.
“முடியாது”
“அப்படியெனில் பைத்தியமாக அலை” என ஆவேசமாகக் கூறிக்கொண்டு வெளியேற முற்பட்டான். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் திரும்பி எலியானா நோக்கி வந்தான். இதனால் பெரிதும் சந்தோஷமடைந்த எலியானா “இப்போதாவது என் அருமை புரிந்ததா” எனக் கேட்டாள்.
“நான் உன்னைத் தேடி வரவில்லை. உன்னை எச்சரித்துப் போகலாமென்று வந்தேன். இதோ பார்! எலியானா, உன் காதலன் எனக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டான். அவனை நான் இனி மன்னிப்பதாக இல்லை. ஆதலால் அவன் அழிவு நெருங்கிவிட்டது. எனவே உன்னை நான் எச்சரிக்கின்றேன். அவர்களிடமிருந்து வீணாக நீயும் மாண்டு விடாதே! அவர்ளை விட்டும், இவ்விடத்தை விட்டும் நீ சீக்கிரம் உன் ஊர் போய்ச் சேர்” எனக் கூறினான்.

“என் மீது உங்களுக்கு என்ன அக்கறை?” அவள் கேள்வியில் மரியாதையும், கனிவும், ஆதங்கமும் நிறைந்திருந்தது. அவள் கண்கள் பனித்திருந்தன. இதனைக் கண்ணுற்ற சங்கிலி ‘இனியும் தாமதித்தால் என் மனம் மாறிவிடும்’ என நினைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். சிறிது நாட்களின் பின் தளபதி இமையாணன் தலைமையில் சங்கிலியின் படை போருக்கு தயாராகி நின்றது.

சாதிக்க வருவான்.

Wednesday, April 28, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 18 -சங்கிலியின் கோபம்)


பெரிதும் சங்கடப்பட்டுக்கொண்டு கோட்டையினுள் நுழைந்த சங்கிலி தன்னை எதிர்பார்த்து தன் நண்பன் இருப்பதைக்கண்டதும் தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு
“என்ன மாப்பாணா! திடீரென்று வந்து நிக்கின்றாய்? என்ன விடயம்?” என்றான்.
“ஒன்றுமில்லை… அரச பதவி ஏற்றது முதல் நீ என்னுடன் ஊர் சுற்ற வரவில்லை. இப்பொழுது நாட்டு நிலவரம் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் சுமூகமாக இருக்கின்றது. வாவேன் நாங்கள் ஒருமுறை யாழ்ப்பாணத்தைச் சுற்றி வருவோம்” என ஆவலுடன் கேட்டான்.
தன் மனச்சஞ்சலங்களை தீர்ப்பதற்கு, அதை மறக்கடிப்பதற்கு இது ஒரு நல்ல ஏற்பாடு என்பதை அறிந்த சங்கிலி, அதற்கு உடன்பட்டான்.

முன்பனிக்காலத்து குளிர், உயிரினங்களின் நாடித்துடிப்புக்களையெல்லாம் மந்தப்படுத்தி நடுங்க வைத்துக்கொண்டிருந்தது. மரஞ்செடி கொடிகளின் இதய நரம்புகள் வரை பனியின் குளிரோட்டம் ஏறிவிட்டிருந்தபடியால் அவை அப்படியிப்படி அசையாமல் விறைத்துக்கிடந்தன. பனிக்காற்றிலுள்ள வரட்சித்தன்மை இலைக்கணுக்களிலிருந்த ஜீவரசத்தையெல்லாம் உறிஞ்சி, அவற்றை பழுத்து உதிரச்செய்து கொண்டிருந்தது. இமயமலைச் சிகரத்திலிருந்து இறங்கி ஓடிவந்தது போல் பனித்துளிகளைச் சுமந்த காற்று எங்கெங்கும் புகுந்து படிந்து எல்லாவற்றையும் ஈரமாக்கியது. அளவுக்கு மீறிய அந்தப் பனிக்குளிர் காற்றில் விறைத்துக்கொண்டு குதிரையில் தோழர்கள் யாழ் நகர் வலம் வந்தார்கள்.


குளிர்காலமாதலால் இருவருக்கும் ஓரளவு வசதியாகப் போய்விட்டது. வீதியோரங்களில் காவல் வீரர்களைத்தவிர பெரிதாக சனநடமாட்டம் இல்லை. இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட வீரர்கள் தெருக்களில் தலைதாழ்த்தி வணங்கினார்கள். தன் பக்கத்தில் நடுங்கியபடி குதிரையில் வந்துகொண்டிருந்த வீரமாப்பாணனைப் பார்த்த சங்கிலி “இனியாவது நீ எனக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கிறாயா பார்ப்போம்” என்றான். காலை நேரமாதலால் கோயில்களின் மணியோசையும், இசைப்புலவர்களின் பாட்டொலியும் யாழ் நகர் வீதிகள் தோறும் ஒலித்தன.

நீண்ட காலத்தின் பின்பு இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டு வந்த சங்கிலி, யாழ் நகரிற்கு தெற்கே கடலோரம் வந்தபோது அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு அருகில் வந்த நண்பனைப்பார்த்து
“மாப்பாணா! தூரத்தில் ஒரு கோட்டை போல தென்படுகின்றதே, அது என்ன?” என வினவினான்.
நிமிர்ந்து வடிவாக அதை உற்று நோக்கிய மாப்பாணன் “சந்தேகமேயில்லை… அது கோட்டை தான்” என்றான் கலவரத்துடன்..
“கோட்டையா?....... என்னிடம் அனுமதி பெறாமல் யார் கட்டியது… ஒருவேளை அண்ணனாக இருக்குமோ?”
“இல்லையில்லை… அவர் கட்டியிருந்தால் நம் வீரர்கள் மூலம் எப்படியும் தகவல் வந்திருக்கும்”
“பின் யார் கட்டியிருப்பார்கள்… நம் ஒற்றர்கள் கூட சொல்லவில்லையே!”
“இது பறங்கிகளுக்காக நாம் அளித்த பிரதேசம் சங்கிலி” என்றான் மாப்பாணன். இதனால் ஐயமுற்ற சங்கிலி “வா! அவ்விடம் சென்று பார்ப்போம்” என நண்பனுடன் அவ்விடம் சென்றான்.

மேற்கத்தேயப் பாணியில் மிகவும் கலை நேர்த்தியுடன் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட அக்கோட்டையை வர வர வியப்புடன் பார்த்து வந்த இருவரையும் இரு வீரர்கள் வழிமறித்தனர். தங்களை வழிமறித்த பறங்கி வீரர்களை கண்டு பெரிதும் சினமடைந்த சங்கிலி “டேய்! உங்கள் தளபதியெங்கே? நான் அவனை உடனடியாகக் காண வேண்டும்” என இடிமுடிக்கம் போல சத்தமிட்டான்.

அவ்விடம் வந்த பறங்கியத் தளபதி பிரகன்ஸா “என்ன அரசே! ஆச்சரியமாக இருக்கின்றதா? இது நாம் கட்டிய சிறிய வீடு. நீங்கள் வருவீர்களென்று தெரிந்திருந்தால் தாரை தப்பட்டைகளுடன் தடபுடலாக அழைத்திருப்போமே” என இகழ்ச்சியுடன் கூறினான்.
“என்ன காரியம் செய்தாய் பிரகன்ஸா? உனக்கு கோட்டை கட்ட யார் அனுமதியளித்தது” என கண்கள் தீயென சிவக்க சங்கிலி கேட்டான்.
சிறுதும் பயப்படாமல் “நீயே தந்தாய்….” எனப் பறங்கியத் தளபதி கூறினான்.
“நானா?...”
“ஆம்”
பறங்கியரின் நோக்கத்தை புரிந்து கொண்ட சங்கிலி, “அடேய், அயோக்கியப் பயலுகளே! இப்போதே கோட்டையை இடித்துவிட்டு மரக்கலமேறி உங்கள் ஊருக்கு செல்லுங்கள்” என ஆணையிட்டான்.

அவன் ஆணையைக் கேட்ட பிரகன்ஸா பெரிதாக நகைத்து “நாம் இடிக்கப் போவதில்லை, முடிந்தால் நீ இடித்துப் பார்” எனச் சவாலிட்டான். இதனால் வெகுண்ட சங்கிலி
“உன் கபடத்தை நானறிவேன். முடிந்தால் உன்னைக் காப்பாற்றிப் பார்” என வீராவேசமாகக் கத்திவிட்டு தன் நல்லூர்க் கோட்டையை வந்தடைந்தான். அவசர அவசரமாகச் சபையைக் கூட்டி நடந்ததை விளக்கினான். அத்துடன் கோபம் கொப்பளிக்க பரநிருபசிங்கனைப் பார்த்து “பார்த்தாயா உன் யோசனையை? நம் நாட்டின் பாதுகாப்பிற்கே பெரிய பங்கம் ஏற்பட்டு விட்டது. இப்பொழுது வேறு வழியில்லை, படையைத் திரட்டுவதைத் தவிர” என்றான். கூடவே தளபதிக்கு யுத்தத்திற்கு தயாராகவும் ஆணையிட்டான்.

இதனை ஏற்றுக் கொண்ட யாழ் தளபதி இமையாணன், அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கலானான். நடக்கவிருக்கும் போரையும், அதனால் ஏற்படப்போகும் அழிவுகளையும் நினைத்துப் பார்த்த சங்கிலி பெரிதும் கவலையுற்றவனாய் தன் சயன அறை நோக்கிச் சென்றான். அங்கு அவனது சினத்தை கூட்டக்கூடியதான ஒரு நிகழ்ச்சி காத்திருந்தது.

சாதிக்க வருவான்…