உலகம் உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் யாழ் நகர் உறங்கவில்லை. வெற்றி மகிழ்ச்சியால் உறங்காமல் திளைத்திருக்க வேண்டிய மக்கள் மீண்டும் ஒரு போருக்காக படைகள் விரைவாக ஆயத்தமாக்கிக் கொண்டிருந்ததால் கவலையால் விழித்திருந்தார்கள். வலிந்து வரும் போரையும், அதனால் ஏற்படப் போகும் அழிவுகளையும் எண்ணி யாழ் மக்கள் கலங்கினார்கள். தெருக்களில் ஜன நடமாட்டமே இல்லை. வீடுகளில் விளக்குகள் அணையவில்லை. மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களிலும் வானளாவப் பறந்து கொண்டிருந்த கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தாலும், அவற்றின் கீழே செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள் அலைந்து, குழைந்து, கலைந்து கிடந்தன. எங்கும் ஒருவித அவசயமான நீர்த்தன்மை புழுக்கமிட்டுக் கொண்ருந்தது.

இங்கே குறுகிய கால அவகாசத்தில் போருக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு சங்கிலியும் பூரண போர்க்கவசமணிந்து போருக்குத் தயாராகியிருந்தான். இதற்கிடையில் பரநிருபசிங்கன் ஓர் உபாயம் செய்தான். ஓர் ஒற்றனைச் சேனாதிபதி இமையாணனைச் சந்திக்கும் படி ஏற்பாடு செய்தான். இதற்கமைய அவன் இமையாணனை அடைந்து, “பறங்கிய ஒற்றனொருவன் கீழைக் கோபுர வாயிலிற் காத்திருக்கின்றான்” என்றான்.
“என்ன விடயம் என்று கேட்டாயா?”
“இல்லை. அவன் தளபதியைச் சந்திக்க வேண்டுமென்று கூறினான். அத்துடன் போர் பற்றிய முக்கிய விடயம் என்றும் கூறினான்”
‘போரை நிறுத்துவதற்காக பறங்கிகள் தூதனுப்பியிருப்பார்களா?’ என சிந்தித்த இமையாணன், ‘அவ்வாறெனின் எவ்வளவு நல்லது. மீண்டும் ஒரு பேரழிவைத் தடுக்கலாம்’ என்ற நினைப்பால் “நான் இதோ வருவதாக அவனிடம் போய்க் கூறு” என தனக்கு எதிராக விரித்திருக்கும் மாயை வலை பற்றி அறியாமல் சொல்லி அனுப்பினான்.
இதேவேளை அரண்மனையில் ஒரு வாயிற்காவலன் சங்கிலியை அணுகி “ஊர்காவற்துறை அரசன் உங்களைக் காண வந்துள்ளார்” என்றான். இதனைச் சிறிதும் எதிர்பார்க்காத சங்கிலியன் “யார் காக்கை வன்னியனா?” என மகிழ்ச்சியுடன் வினவினான்.
“ஆம்”
“ஏன் அவனைக் காக்க வைத்துள்ளீர்கள். சீக்கிரம் அவனை உள்ளே அனுப்புங்கள்” எனக் கட்டளையிட்டான்.
“காக்கை வன்னியனுடன் சில வீரர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை என்ன செய்வது”
“எல்லோரையும் உள்ளே விடு!” சங்கிலி கூறினான்.
இதனால் காக்கை வன்னியன் தலைமையிலான பத்துப் பன்னிரண்டு வீரர்கள் சங்கிலியன் இருந்த இடத்திற்கு வந்தனர். காக்கை வன்னியனைக் கண்ட சங்கிலி, அவன் ஆருயிர்த் தோழனாதலால் ஓடோடிச் சென்று கட்டியணைத்து வரவேற்றான்.
“என்ன நண்பா திடீர் விஜயம்?” சங்கிலி கேட்டான்.
“மண்டை தீவுக்கு ஒரு அலுவலாக வந்தேன். அவ்வாறே உன்னையும் பார்த்துச் செல்லலாம் என இங்கு வந்தேன்” என சிறிதும் குழப்பம் அடையாமல், தான் வந்த எண்ணம் சங்கிலிக்கு தெரியக்கூடாது என்பதற்காக நிதானமாகக் கூறினான்.
“நீ வருவாய் என அறிவித்திருந்தால், எவ்வளவு ராஜ மரியாதையுடன் வரவேற்றிருப்பேன். யாழ்பாணம் முழுவதும் முறைசறைவித்திருப்பேன். இப்பொழுது திருடன் மாதிரி வந்திருக்கிறாயே?” என நகைச்சுவையாகக் கூறினான்.
சங்கிலியின் நகைச்சுவையைக் கேட்டு பயந்த காக்கை வன்னியன் சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
“வா நண்பா! இப்படி உட்கார். நான் உனக்கு எவ்வளவு உபகாரங்களைச் செய்ய வேண்டும். அதற்கெல்லாம் இப்போது நேரமில்லாது போய் விட்டது. நீ அறிந்தாயோ தெரியாது. வயிற்றுப் பிழைப்புக்காக வந்த பரதேசிப் பறங்கிகள் என்னையே ஏமாற்றி என் மீதே போர் தொடுத்தார்கள். நான் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தும் மீண்டும் எம் மீது படையெடுத்து வருகின்றார்கள். எவ்வளவு நெஞ்சழுத்தம் பார்த்தாயா? இதற்கு யாரோ எம்முடன் நெருங்கிப் பழகுபவர்கள் ஆதரவு வழங்குகிறார்கள். அது தான் எனக்கு கவலையாக இருக்கின்றது” என அவனை இருக்கையை நோக்கி சங்கிலி அழைத்துச் சென்றான்.
“ஆ… அப்படியா? எனக்குத் தெரியாமற் போய்விட்டதே! இனியும் தாமதிக்கக் கூடாது. உனக்குத் துணையாக நானிருக்கின்றேன். நீ கவலைப் படாதே” என கட்டியணைத்து சங்கிலிக்கு தெரியாமலே சற்று இறுக்கிக் கொண்டான். அத்துடன் தன் முன்னால் நின்ற வீரர்களுக்குக் கண்ணைக் காட்டினான்.
அன்று சங்கிலிக்கு பின் தலையில் மாத்திரம் ஒரு கண்ணிருந்தால் யாழ்ப்பாணத்திற்கு நேர இருந்த அவலம் தடுக்கப்பட்டிருக்கும். விதி விளையாடியது. காக்கை வன்னியன் கண்ணசைப்பால் முன்னேறிய வீரர்கள் சங்கிலியின் இடையிலிருந்த வாளை அகற்றினார்கள். இதனால் திணறிய சங்கிலி சுதாகரிப்பதற்குள் பின் தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தது. சங்கிலி மயங்கிச் சரிந்தான். அவன் குரலைக் கேட்டு ஓடிவந்த காவலர்கள் காக்கை வன்னியன் வீரர்களுடன் போரிட ஆயத்தமான போது, அங்கு வந்த பரநிருபசிங்கன் அவர்களைத் தடுத்தான். “தளபதி இல்லாமல் நாங்கள் போரிடக் கூடாது” என கூறினான். பரநிருபசிங்கனது வஞ்சகத்தை அறியாத வீரர்களும் பேசாமல் நின்றனர். நினைவிழந்து கிடந்த சங்கிலியை காக்கை வன்னியன் வீரர்கள் தூக்கிச் சென்றனர்.
இதேவேளை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சாதாரணமாக வழமை போன்று தூதனைச் சந்திப்பதற்காக கோட்டை கோபுர வாயிலுக்கு வந்த தளபதி இமையாணன், அங்கு ஒருவரையும் காணாததால் சிறிது நேரம் அங்கும் இங்கும் பார்த்து விட்டு உள்ளே செல்லத் திரும்பினான். அக்கணத்தில் எங்கோ இருந்து பறந்து வந்த குறுவாள் ஒன்று அவன் கழுத்தில் புதைந்து நின்றது. தளபதி அலறித்துடித்துக் கொண்டு நிலத்தில் வீழ்ந்தான். யாழ்ப்பாணம் ஒரு சிறந்த தளபதியை இழந்தது. மறைந்திருந்த பல பறங்கி வீரர்கள் வெளிவந்து தளபதியின் உடலை எடுத்துச் சென்றார்கள்.
கோட்டைக்குள் இருந்த சங்கிலியின் வீரர்கள் எந்தவித வழிநடத்தலும் இல்லாது திணறி நின்றனர். பரநிருபசிங்கன் கோட்டைப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டான். சங்கிலியின் மயங்கிய உடலும், தளபதியின் உயிரற்ற சடலமும் பறங்கிக் கோட்டை கொண்டு செல்லப்பட்டது. மக்கள் திகைத்து நின்றனர்.
சாதிக்க வருவான்….